மேட்டூர் காவிரி கரையில் 2500 ஆண்டு பழமையான கற்கால கல் வட்டங்கள் கண்டுபிடிப்பு

 

மேட்டூர்: மேட்டூர் காவிரி கரையில், 2500 ஆண்டுகள் பழமையான பெரும் கற்கால ஈம சின்னங்களான கல்வட்டங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. இதில், நீரில் மூழ்கி இருந்த 2500 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள், வெளியில் தெரிய துவங்கி உள்ளது. சிறகுகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் செந்தில்குமார், வடிவுக்கரசி, கலைச்செல்வன் மற்றும் ஷாஜகான் ஆகியோர், மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறை பகுதியில், ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பெரிய கற்கள் வட்ட வட்டமாக அடுக்கி வைத்தது போன்ற ஒரு அமைப்பினை கண்டனர்.

அவர்களின் ஆய்வில், இது 2,500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஈம சின்னமான கல்வட்டங்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் கலைச்செல்வன் கூறியதாவது: பெரிய கற்களை கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்த காலகட்டமே, பெருங்கற்காலம் என கூறப்படுகிறது. கற்திட்டை, கற்பதுக்கை, கற்குவை, கல் வட்டங்கள் என்று பல வகையான நினைவு சின்னங்களை அமைத்து, உயிர் நீத்தோரை பண்டைக்கால மக்கள் வழிபட்டு வந்தனர். தரையின் கீழே, குழியை தோண்டி அதில் கல்லறை அமைத்து, ஒரு மூடு கல்லை கொண்டு மூடி அதன் மேல் மண்ணையும், சிறிய கற்களையும் குவிப்பார்கள். அல்லது வட்ட வடியில் அடுக்குவார்கள். இந்த கற்குவியல் கல்வட்டமாகும். முதுமக்கள் தாழி எனப்படும் பெரிய மண்பாண்டத்தில், இறந்தவர்களின் உடல்களை வைத்து அடக்கம் செய்வார்கள்.

பண்ணவாடி பரிசல் துறை பகுதியில், தற்போது வெளியில் தெரியும் கல்வட்டங்கள், சீரான இடைவெளியில் ஏழுக்கும் மேற்பட்டவை காணப்படுகின்றன. இவை 4 மீட்டர் முதல் 7 மீட்டர் வரை விட்டம் கொண்டவையாகும். ஒவ்வொரு கல்வட்டத்திலும், 16 முதல் 23 வரையிலான பெரிய அளவிலான உருண்டை கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சில கல்வட்டங்களில் நான்கு பலகை கற்களை கொண்டு ஒரு அறை போல மண்ணிற்குள் அமைத்து அதன் மேல் ஒரு பலகைகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு கற்பதுக்கை என்று அழைக்கப்படுகிறது. இவை 2500 ஆண்டுகள் பழமையானவை. மேலும், பாதுகாக்கப்பட வேண்டியவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கல்வட்டங்களில் புதையல் இருப்பதாக கூறி, நள்ளிரவில் சிலர் ஆடு பலியிட்டு கல்வட்டங்களை தோண்டி பார்த்துள்ளனர்.

அப்போது, பண்ணவாடி பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த கல்வட்டங்களில் இறந்தவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும், சில சமயங்களில் அணிகலன்களும், சடலங்களுடன் வைத்து அடக்கம் செய்யப்படுவதுண்டு. இதுபோன்ற கல்வட்டங்கள், மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் உள்ள தெலுங்கனூர், கீரைக்காரனூர் பகுதிகளிலும் உள்ளன.

Related Stories: