சென்னை : மெரினா கடற்கரையில் உணவுப் பொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு, டிசம்பர் 22 ம் தேதி கடற்கரையை நேரில் ஆய்வு செய்தனர். இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
“நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்க கூடாது.
“உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைந்துள்ள நிரந்தர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும்.
“உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை. சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள் மறைப்பதால், தற்போது 1,417 கடைகள் அமைப்பது என்ற திட்டத்தை மறு ஆய்வு செய்து, கடைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும்.
“உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மற்ற கடைகள் தேவையில்லை.
“கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரையை ரசிக்க கடைகள் இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்,” இவ்வாறு தெரிவித்தனர்.
அத்துடன் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
