டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இறுதி சடங்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கினார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், 3 முறை பிரதமராக இருந்தவருமான கலிதா ஜியா, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், கலிதா ஜியாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. இதில் இந்தியா சார்பில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கார் டாக்கா புறப்பட்டு சென்றார். அவர் கலிதா ஜியாவின் மூத்த மகனும் வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மானை சந்தித்து பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கினார்.
இது குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், ‘‘தாரிக் ரஹ்மானை சந்தித்து அவரிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கினேன். இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தேன். கலிதா ஜியாவின் தொலைநோக்குப் பார்வை நமது கூட்டாண்மையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும்’’ என கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து, கலிதா ஜியாவின் இறுதி சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்றார். பல்வேறு மத சடங்குகளுடன் கலிதா ஜியாவின் உடல், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகே உள்ள மாணிக் மியா அவென்யூவில் அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மான் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கூடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
