துபாய்: சவுதி அரேபியாவின் தாக்குதலைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தொடக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக இரு நாடுகளின் நோக்கங்களும் மாறுபட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவு பெற்ற தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) என்ற பிரிவினைவாத குழு, சமீபத்தில் பெரும் தாக்குதலை நடத்தி ஏமனின் 52 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றியது. இதில் வளம் மிக்க ஹத்ரமௌத் மற்றும் மஹ்ரா மாகாணங்களும் அடங்கும்.
இதனால் ஏமன் அரசுக்கு ஆதரவளிக்கும் சவுதி அரேபியாவிற்கும், பிரிவினைவாதிகளுக்கு உதவும் அமீரகத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று தெற்கு ஏமனில் உள்ள முகல்லா துறைமுகம் அருகே ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கப்பல் மீது சவுதி கூட்டுப்படை திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ‘பிரிவினைவாத குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் கவச வாகனங்களை அமீரகம் அனுப்பியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏமன் அதிபர் கவுன்சில் தலைவர் ரஷாத் அல்-அலிமி, அமீரகத்துடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், ‘24 மணி நேரத்திற்குள் படைகள் வெளியேற வேண்டும்’ என்று கெடு விதித்தார்.
இந்த நடவடிக்கையை ‘மிகவும் ஆபத்தானது’ என சவுதி அரேபியாவும் சாடியது. இந்த குற்றச்சாட்டால் அதிர்ச்சியடைந்த அமீரக பாதுகாப்புத் துறை, ‘பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்கள் ஏதும் அனுப்பவில்லை’ என்று மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் மோதலை தவிர்க்கும் வகையில், எஞ்சியிருக்கும் தனது தீவிரவாத எதிர்ப்புப் படைப்பிரிவை திரும்பப் பெறுவதாக அமீரகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இரு தரப்புடனும் பேசி அமைதி காக்க வலியுறுத்தியுள்ளார்.
