×

கோவை மாவட்டம் சிறுமுகையில் தமிழ்நாட்டின் முதல் வனவிலங்கு சிகிச்சை மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வனவிலங்குகள் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி கோவை வனக்கோட்டம் 694 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாய்க்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகளுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பாட்டாலோ வண்டலூர் மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளுக்கு மட்டுமே கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடியும். இதனால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வகையில் தமிழ்நாட்டின் முதல் வனவிலங்கு மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பெத்திக்குட்டை பகுதியில் 20 ஹெக்டர் பரப்பளவில் ரூ.19.50 கோடி செலவில் அதி நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகள், பறவைகள், உயிரினங்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனித்தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க மொத்தம் 16 கூண்டுகளும், யானைகளுக்கு கரோல் எனப்படும் மரத்தினால் செய்யப்பட்ட தனி கூண்டுகளும், குட்டி யானைக்கு தனி கரோலும் அமைக்கப்பட்டுள்ளன. எந்தப் பகுதியில் வனவிலங்குகளுக்கு காயம் அல்லது உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும், இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வனவிலங்குகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வசதியாக அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளும், வன ஊழியர்கள் தங்குமிடம், கண்காணிப்பு கோபுரம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.  இந்த மையம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோவை வடகோவை பகுதியில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் இதனை காணொலி வாயிலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு வனப்படை நவீனமாக்குதல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி, வன உயிரினம் இடமாற்றம் சிகிச்சை மையம் திறப்பு விழா, சாடிவயல் யானைகள் முகாம் திறப்பு விழா, தமிழ்நாடு வனத்துறை மின்னணு ஆவண காப்பகம் துவக்க விழாவும் அங்கு நடந்தது. இதில், வனத்துறையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

Tags : Tamil Nadu ,Sirumugai, Coimbatore district ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Coimbatore ,Sirumugai ,Coimbatore district ,Coimbatore Forest Reserve ,Western Ghats ,Coimbatore Forest Reserve… ,
× RELATED மெட்ரோ ரயில் திட்டம்: மேலகிரி என...