×

அரசியல் கட்சிகளின் முகவர்கள் தினமும் 10 படிவங்களை பிஎல்ஓக்களிடம் தரலாம்: தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.1.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும். அதன்படி வருகிற ஜனவரி 18ம் தேதி வரை, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிகளை முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பினை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு பிறகு நாள்தோறும் அதிகபட்சம் 10 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் அதிகபட்சம் 10 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட படிவங்களை பெற்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும்போது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அந்த படிவங்களில் உள்ள விவரங்கள் தன்னால் சரிபார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என்ற உறுதிமொழியினையும் வழங்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்த்து அவற்றை டிஜிட்டல் வடிவமாக தொடர்புடைய உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிப்பார். வாக்காளர் பதிவு அலுவலர் அப்படிவங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Election Commission ,Chennai ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Archana Patnaik ,
× RELATED ஏற்காடு காபி தோட்டத்திற்கு வரவழைத்து...