×

நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் பணிகளை கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அதிரடி உத்தரவு

சென்னை : சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், நெடுஞ்சாலைத்துறையின் செயல்பாடுகள் குறித்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: சாலைப் பழுதுகள், சாலையில் ஏற்பட்ட நொடிகள், பேட்ச் ஒர்க் செய்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும், சாலை ஓரங்களில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். மலைப் பிரதேசங்களில் சாலை ஓரங்களில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். சாலைப் புருவங்கள் தார் சாலையின் மட்டத்தைவிட உயரமாக உள்ளதால் மழைநீர் வடிய இயலாத நிலை உள்ளது. மழைநீர் வடிய ஏதுவாக சாலை புருவங்களை சீரமைக்க வேண்டும். கிலோ மீட்டர் கற்கள் மற்றும் பர்லாங் கற்கள் இல்லாத இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் கற்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பணிகளை எல்லாம் ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சத்தியபிரகாஷ், சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர், முதன்மை இயக்குநர் செல்லதுரை, தரக்கட்டுப்பாடு இயக்குநர் சரவணன், கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,E.V. Velu ,Highways Department ,Chennai ,Highways ,Minor ,Ports ,Guindy Highway Research Institute ,
× RELATED ஏற்காடு காபி தோட்டத்திற்கு வரவழைத்து...