தைலாபுரம் இல்லம் முன்பு பரபரப்பு ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர் மோதல்: திண்டிவனம் காவல் நிலையம் முற்றுகை; 15 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

திண்டிவனம்: தைலாபுரம் இல்லம் முன்பு ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர் திடீர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பும் திண்டிவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே வெடித்துள்ள மோதல் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. கடந்தாண்டு டிசம்பரில் நடந்த பொதுக்குழுவில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக பேரன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தபோது பற்றி எரியத் தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவே இல்லை.

இந்நிலையில் சேலத்தில் நேற்று முன்தினம் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய செயல் தலைவர் காந்தியின் மகனும், பாமக மாநில செயற்குழு உறுப்பினருமான சுகந்தன், ‘‘பதவி வெறி கண்ணை மறைத்தால் பெற்ற தகப்பன்கூட எதிரியாகத்தான் தெரிவான். மாமாவின் கண்ணை பதவி வெறி மறைக்கிறது’’ என அன்புமணியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அன்புமணி குறித்து சுகந்தனின் இந்த விமர்சனம் அவரது ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அன்புமணி ஆதரவாளரான மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜேஷ் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அன்புமணி பற்றி அவதூறு பேச்சுக்களை இனி ஏதேனும் மேடைகளில் பேசினால் நிச்சயம் திண்டிவனம் வந்தால் சுகந்தனை முற்றுகையிடுவோம். சிங்கக்குட்டிக்கும் சிறுநரி குட்டிக்கும் வித்தியாசம் இல்லையாடா, மேடையில் பிதற்றுகிற வேலையெல்லாம் இத்தோடு நிறுத்திக் கொள். இது லட்சக்கணக்கான அன்புமணி தம்பிகளில் ஒருவரின் எச்சரிக்கை’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே திண்டிவனம் காமாட்சி அம்மன் கோயில் வீதியிலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் அருகே உள்ள டீக்கடையில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்கள் நேற்று காலை டீ குடிக்க வந்துள்ளனர். அப்போது முகநூலில் பதிவு போட்ட ராஜேஷிடம், ராமதாஸ் ஆதரவாளரான சமூக நீதி பேரவை மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ராஜாராம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ராமதாஸ் இல்லம் அருகே வந்தும் மோதலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க ராமதாஸ் இல்லம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் இருதரப்பினரும் திண்டிவனம் காவல் நிலையம் சென்று தனித்தனியாக முறையிட்டனர். அப்போது, ராஜேசுக்கு ஆதரவாக அன்புமணி ஆதரவாளரும், மயிலம் தொகுதி எம்எல்ஏவுமான சிவக்குமார் வந்தபோது, ராமதாஸ் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர் ஜெயராஜ், புகழேந்தி ஆகியோர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மீண்டும் இருதரப்பினரும் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்படவே, அவர்களை அப்புறப்படுத்திய போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்து அனுப்பினர். இதனிடையே அன்புமணி தரப்பில் ராஜேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜாராம், விஜயகுமார், சவுந்தர், தினேஷ், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜாராம் அளித்த புகாரின்பேரில் ராஜேஷ், ஜெகன், பிரசாந்த், கார்த்திக், சண்முகம், காமராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: