‘நான் இந்தியன்’ என்று கூறியும் ‘சீனர்’ என கேலி செய்து திரிபுரா மாணவர் கொலை: உத்தரகாண்டில் இனவெறி அட்டூழியம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் கடைக்குச் சென்ற திரிபுரா மாணவரை ‘சீனர்கள்’ என்று இனவெறியுடன் கேலி செய்து கத்தியால் குத்தியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் தங்கி எம்பிஏ படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா (24), கடந்த 9ம் தேதி மாலை தனது தம்பி மைக்கேலுடன் செலகுய் பகுதியில் மளிகை பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் நின்றிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து ‘சீனர்கள்’, ‘நேபாளி’ மற்றும் ‘மோமோ’ என்று இனவெறியைத் தூண்டும் வகையில் கிண்டல் செய்தது.

இதைத் தட்டிக்கேட்ட ஏஞ்சல் சக்மா, ‘நாங்கள் சீனர்கள் அல்ல, இந்தியர்கள். இதை நிரூபிக்க என்ன சான்றிதழ் காட்ட வேண்டும்?’ என்று அமைதியாக பதில் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் மைக்கேலை தாக்கியதுடன், தடுக்க வந்த ஏஞ்சல் சக்மாவின் கழுத்து, முதுகு மற்றும் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஏஞ்சல் சக்மா உடனடியாக மீட்கப்பட்டு டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவினாஷ் நெகி, சவுரியா ராஜ்புத் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசி குற்றவாளிகளுக்கு உரியத் தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: