*நெற்பயிர்கள் சேதம்
விகேபுரம் : விகேபுரத்தில் விளைநிலங்களில் புகுந்து யானை கூட்டம் நெற்பயிர்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மிளா உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் விளைவிப்பதும், வளர்ப்பு பிராணிகளை கடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனவன்குடியிருப்பைச் சார்ந்த விவசாயி கல்யாணராமன் (57) என்பவரது விளைநிலங்களில் புகுந்து யானைகள் கூட்டமாக நெற்பயிர்களை சேதப்படுத்தியது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது ரோந்து பணிக்கு வனத்துறையினர் செல்வதில்லை என தெரிகிறது. மலையடிவார பகுதியான அப்பகுதியில் கரும்பு, நெற்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அங்கு 500 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், யானை கூட்டங்கள் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் அப்பகுதியில் மீண்டும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கல்யாணராமன் கூறுகையில் ‘‘ஒரு ஏக்கர் பரப்பில் நெற்பயிர்களை நான் பயிரிட்டிருந்தேன். ஆனால் நேற்று முன்தினம் 4 யானைகள் புகுந்து நெற்பயிர்களை சேதம் விளைவித்தன.
இதனால் எனக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இப்பகுதியில் யானைகள் புகாதவாறு வனத்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’என்றார்.
சேர்வலாறு மலைச்சாலையை மறித்து நின்ற ஒற்றை யானை வீடியோ வைரல்
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் இரை மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. குறிப்பாக காரையாறு மற்றும் சேர்வலாறு செல்லும் மலைச்சாலையில் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் சாலையோரங்களில் அவை சர்வசாதாரணமாக உலா வருகின்றன.
இந்நிலையில் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் இருந்து சேர்வலார் அணைக்கு செல்லக்கூடிய பிரதான மலைச்சாலையில் முதல் வேகத்தடை அருகே தந்தத்துடன் கூடிய மிகப்பெரிய காட்டு யானை நின்று கொண்டிருந்தது.
அவை சாலையோரங்களில் இருந்த இலை தழைகளையும், செடி, கொடிகளையும் தின்றவாறு அடர் வனப் பகுதிக்குள் சென்றது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளை அச்சுறுத்தும் யானை கூட்டம்
விகேபுரத்தில் அனவன்குடியிருப்பு பகுதியில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அறுவடைக்கு தயாராகியுள்ளது. இதனால் விளைநிலங்களில் விவசாயிகள் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஒற்றை யானை வந்தால் அவர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை எளிதாக விரட்ட முடியும்.
ஆனால் கூட்டம், கூட்டமாக யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவதால் விவசாயிகள் விரட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் அவர்கள் யானை கூட்டத்துக்கு தங்களை தற்காத்து கொள்ள ஓளிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதையும் மீறி சத்தம் எழுப்பினாலோ, வெடி, வெடித்தாலோ யானைகள் கூட்டமாக தாக்க வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
