×

கடையநல்லூர் கலைமான் நகரில் சாலை, வாறுகால் உள்பட எவ்வித அடிப்படை வசதியுமின்றி தவிக்கும் பளியர் இன மக்கள்

* மயானம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை வீட்டருகே அடக்கம் செய்யும் கொடூரம்

* அவசர தேவைக்கு ஆட்டோவிற்கு கூடுதலாக பணம் ெகாடுத்து செல்லும் அவலம்

கடையநல்லூர் : கடையநல்லூர் நகராட்சி 1வது வார்டு கருப்பாநதி அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் உள்ள கலைமான் நகரில் வசிக்கும் மக்கள் சாலை, பேருந்து, வாறுகள் உள்பட எந்த வித அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் சுடுகாடு இல்லாததால் வீட்டின் அருகே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. பேருந்து வசதியில்லாததால் அவசர தேவைக்கு கூடுதலாக பணம் கொடுத்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி திரிகூடபுரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் கருப்பாநதி அணை உள்ளது. இந்த அணைக்கு செல்லும் வழியில் பளியர் இன மக்கள் வசிக்கும் கலைமான் நகர் உள்ளது. இந்த நகரில் தற்போது 22 வீடுகள் உள்ளது. இதில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்பவை வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சுடுகாடு இல்லாததால் வீட்டின் அருகே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பஸ் வசதி இல்லாததால் அவசர தேவை என்றால் ஆட்டோவிற்கு கூடுதலாக பணம் கொடுத்து செல்லும் அவலம் இன்றளவும் தொடர்கிறது. இதனால் பளியர் இன மக்கள் அனுதினமும் சொல்லெண்ணா துயரத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து பளியர் இன மக்கள் கூறுகையில் ‘‘நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் வசித்து வருகின்றோம். நாங்கள் தினமும் மலைப்பகுதிக்கு சென்று ஈச்சம்புல், சாம்பிராணி, தேன், ஏலக்காய், நெல்லிக்காய் சேகரித்து பிழைப்பு நடத்தி வருகின்றோம்.

நாங்கள் சேகரிக்கும் பொருள்களை விற்பனை செய்வதற்கு இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நாங்கள் வசிக்கும் தெருக்களில் வாறுகால் வசதியின்றி குண்டும் குழியுமாக மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டுள்ளது.

இதனை சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். மேலும் எங்களுக்கென்று வழங்கப்பட்டுள்ள வீட்டு மனை அருகில் தற்போது எங்கள் பகுதியில் உடல் நலக்குறைவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றோம். எனவே எங்கள் பகுதி மக்களுக்கு என்று தனியாக சற்று தொலைவில் தனியாக மயானக்கூடம் அமைத்து தர வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு பிறகு எங்களது கோரிக்கையை ஏற்று திரிகூடபுரத்திலிருந்து கருப்பாநதி அணைக்கட்டு வரை ஒரே ஒரு அரசு பேருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்பட்டு வருகிறது. அதனை கூடுதலாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனென்றால் காலையில் வரக்கூடிய பேருந்தில் ஏறி சென்றால் மீண்டும் ஊருக்கு வருவதற்கு மாலையில் வரும் அந்த பேருந்து வரை காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆட்டோவில் வரவேண்டிய சூழ்நிலை உள்ளது’’ என்றனர்.

சாலை அமைக்க அரசுக்கு பரிந்துரை

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் கூறுகையில் ‘‘இந்த வார்டு கவுன்சிலர் மற்றும் அப்பகுதி மக்களின் நலன் கருதி கோரிக்கையை ஏற்று திராவிட மாடல் அரசின் ஏற்கனவே ரூ.25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சோலார் மின் விளக்குகள் அமைத்து கொடுத்துள்ளோம்.

மேலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கலைமான் நகர் தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு ரூ.33 லட்சம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன் பணிகள் துவக்கப்படும்’’ என்றார்.

Tags : Palaya ,Kalaiman Nagar ,Kadayanallur ,Kalaiman ,Karuppanathi Anicut ,
× RELATED சாயர்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் குலை விளைச்சல் அமோகம்