×

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் வீட்டுமனை தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி

*நடவடிக்கை கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

திருவண்ணாமலை : வீட்டுமனை தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், சாலை வசதி, குடிநீர் வசதி, தாட்கோ கடனுதவி, பயிர் கடன் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 658 நபர்கள் மனு அளித்தனர்.

பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

மேலும், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மனு அளிக்க காத்திருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கலெக்டர் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். அப்போது, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில், புதூர்செங்கம் அடுத்த உண்ணாமலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அந்த பகுதியில் புதியதாக வீட்டுமனை பிரிவு ஏற்படுத்தியதாகவும், அதற்காக 20க்கும் மேற்பட்டோர் தலா ரூ.1 லட்சம் வீதம் முன்பணம் செலுத்தியும் கடந்த 6 ஆண்டுகளாக பத்திர பதிவு செய்துதராமல், பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி உள்ளனர்.

எனவே வீட்டுமனை வாங்க அளித்த முன்பணத்தை திரும்பத் தராமல் அலைகழிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. குறைதீர்வு கூட்டத்தின்போது, தீக்குளிக்கும் சம்பவங்களை தவிர்க்க, கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டுசென்ற பொருட்களை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

Tags : Tiruvannamalai ,Tiruvannamalai Collector ,Collector ,
× RELATED சாயர்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் குலை விளைச்சல் அமோகம்