இம்ரான் கானின் ஆதரவாளரால் பரபரப்பு; பாக். ராணுவ தளபதிக்கு கொலை மிரட்டல்: இங்கிலாந்து தூதருக்கு சம்மன் அனுப்பி கண்டனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இங்கிலாந்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், பிரிட்டன் துணைத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் அரசு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீபி ஆகியோருக்கு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் இம்ரான் கானின் பிடிஐ கட்சித் தொண்டர்கள் அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்தின் பிராட்போர்டு நகரில் கடந்த 23ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, இம்ரான் கானின் பெண் ஆதரவாளர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், 1988ம் ஆண்டு ஜெனரல் ஜியா-உல்-ஹக் கொல்லப்பட்டது போல, தற்போதைய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை கார் வெடிகுண்டு மூலம் கொலை செய்யப் போவதாக அவர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார். இந்த ‘வன்முறையைத் தூண்டும்’ வீடியோ விவகாரம் பூதாகரமான நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இஸ்லாமாபாத்தில் உள்ள இங்கிலாந்து துணைத் தூதர் மாட் கானலை நேரில் அழைத்து தனது அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்தது. இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தலால் சவுத்ரி, ‘இங்கிலாந்து மண்ணைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் அமைதியின்மையை ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த இங்கிலாந்து தூதரகம், இச்சம்பவம் தொடர்பான முழுமையான ஆதாரங்களை அளித்தால் காவல் துறை மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

Related Stories: