ஓட்டலில் இளம்பெண் கொலை; நடிகை வெளியிட்ட ஆடியோவால் பாஜக மூத்த தலைவருக்கு சிக்கல்..? உத்தரகாண்ட் காங்கிரஸ் போர்க்கொடி

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அங்கிதா பண்டாரி கொலை வழக்கில், நடிகை ஒருவர் வெளியிட்ட ஆடியோ ஆதாரத்தால் மீண்டும் விசாரணை சூடுபிடித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் அருகே உள்ள வனந்தாரா சொகுசு விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றிய 19 வயது இளம் பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். விடுதிக்கு வரும் முக்கிய நபர் ஒருவருக்கு ‘சிறப்பு சேவை’ அளிக்க மறுத்ததால் அவர் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜக பிரமுகரின் மகன் புல்கித் ஆர்யா உட்பட 3 பேருக்கு கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் அந்த ‘முக்கிய விஐபி’ யார் என்பது மர்மமாகவே இருந்த நிலையில், அது தொடர்பான சர்ச்சை தற்போது மீண்டும் வெடித்துள்ளது. முன்னாள் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ரத்தோரின் மனைவி எனக் கூறப்படும் நடிகை ஊர்மிளா சனாவர், சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் தற்போது புயலைக் கிளப்பியுள்ளன. அந்த ஆடியோவில், வழக்கில் தொடர்புடைய மர்ம நபராக கருதப்படும் ‘விஐபி’ பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் துஷ்யந்த் கவுதம் (கட்டு) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து டேராடூன் நேரு காலனி போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேற்று 2 புதிய எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி வி.முருகேசன் கூறுகையில், ‘புதிய தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார். ஆனால், இந்த ஆடியோ செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்டது என சுரேஷ் ரத்தோர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே விஐபி யார் என்பதை கண்டறிய சிபிஐ விசாரணை வேண்டும் என காங்கிரஸ் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது.

Related Stories: