புஷ்பா-2 பிரீமியர் ஷோவில் பெண் பலி நடிகர் அல்லு அர்ஜூன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 11வது குற்றவாளியாக சேர்ப்பு

திருமலை: செம்மரக்கடத்தலை மையமாக கொண்டு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. அதன் அடுத்த பாகமாக வெளியான புஷ்பா- 2 படம் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வெளியானது. இதற்கான பிரீமியர் ஷோ ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க சென்றார். அப்போது தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயங்களுடன் மயக்கமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்றிலிருந்து ஸ்ரீதேஜ் நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் ஸ்ரீதேஜால் இன்னும் பேசவும், நடக்கவும் முடியவில்லை. சிறுவனுக்கு ஆபத்தில் இல்லை என்பதால் மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர்.

இதுதொடர்பாக சிக்கடப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் மொத்தம் 23 பேரை போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களில் நடிகர் அல்லு அர்ஜூனை ஏ11 ஆக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

தியேட்டர் நிர்வாகத்தை குற்றப்பத்திரிகையில் ஏ1 ஆகவும், 3 மேலாளர்கள் மற்றும் 8 பவுன்சர்களும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன், நான்கு சாட்சிகளும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவ்வழக்கில் அல்லுஅர்ஜூன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு நாள் இரவு சிறையில் இருந்து நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் பின்னர் ஜாமீனில் விடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: