திருவனந்தபுரம்: பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடந்தது. 41 நாள் மண்டலகாலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் கடந்த நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கியது. பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்ததால் தரிசனத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி உடனடி முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 23ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட தங்க அங்கி நேற்று முன்தினம் மாலை 6.20 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தது. தொடர்ந்து தங்க அங்கி ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நேற்று அதிகாலை 3 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கின. 3.20 மணியளவில் தொடங்கிய நெய்யபிஷேகம் 10 மணியுடன் நிறுத்தப்பட்டது. காலை 10.10க்கும் 11.30க்கும் இடையே மண்டல பூஜை நடைபெற்றது. இந்த சமயத்தில் திரளான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்திருந்தனர். மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
இதன் பிறகு மாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட பூஜைகளுக்குப் பின்னர் இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. நேற்றுடன் 41 நாள் நீண்ட மண்டலகாலம் நிறைவடைந்தது. மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.
* ஜனவரி 10ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்தது
மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. இந்நிலையில் ஜனவரி 10ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது. 11ம் தேதி முதல் மகரவிளக்கு பூஜை தினமான 14ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.
நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த 4 நாட்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. 11, 12 தேதிகளில் தலா 70 ஆயிரம் ேபருக்கும், 13ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும், 14ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சபரிமலை வருவாய் ரூ.332.77 கோடி
சபரிமலை மண்டல பூஜை காலத்தில் இதுவரை மொத்தம் 30.56 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ. 332.77 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்தார். சனிக்கிழமை மதியம் வரை 30,56,871 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த சீசனில், மண்டல காலம் முடிவடையும் வரை மொத்தம் 32,49,756 பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்திருந்தனர். நடப்பு சீசனில் சபரிமலையில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் இதுவரை ரூ. 332,77,05,132 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.297.06 கோடி வருவாய் வந்திருந்தது.
