கூடலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை பலி

கூடலூர் : கூடலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலையை அடுத்த முறம்பிலாவு பகுதியில் தனியார் தோட்ட சதுப்புநிலம் உள்ளது. இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கம்.

அவ்வாறு நேற்று முன்தினம் மாலை யானை கூட்டத்துடன் வந்த ஒரு குட்டி யானை சேற்றில் சிக்கியது. அந்த குட்டியை மீட்க தாய் யானை மற்ற யானைகள் முயன்றன. ஆனால், சேற்றில் இருந்து வெளியே இழுக்க முடியாததால், குட்டி யானை இறந்து விட்டது.

இதையறிந்த தாய் யானை மற்றும் யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. இதை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் பார்த்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் குமார் மேற்பார்வையில் தன்னார்வலர்கள், வார்டு கவுன்சிலர் முன்னிலையில் இறந்த குட்டி யானையை முதுமலை புலிகள் காப்பகம் உதவி வன கால்நடை மருத்துவர் அடங்கிய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். முக்கிய உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டு யானையின் உடல் பிற விலங்குகளின் உணவுக்காக அப்பகுதியில் விடப்பட்டது.

Related Stories: