திருமயம், அரிமளம் பகுதிகளில் தயாரிப்பு, காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் விற்கப்படும் தின்பண்டங்கள்

*அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

*குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படும் என எச்சரிக்கை

திருமயம் : திருமயம், அரிமளம் பகுதிகளில் தயாரிப்பு, காலாவதியாகும் தேதி குறிப்பிடாமல் விற்கபடும் தின்பண்டங்கள், குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மளிகை, பேக்கரி, பெட்டிகடை, காய்கறி கடை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு அதிகளவில் எண்ணெயில் பொரித்த உணவான ஸ்னாக்ஸ் வகை தின்பண்டங்கள் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது. காரணம் இதனை குழந்தைகள் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

எனவே குழந்தைகளை கவரும் வண்ணம் ஸ்னாக்ஸ் பல்வேறு வண்ணங்களில் விதவிதமாக தாயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இது போன்ற ஸ்னாக்ஸ் வகைகள் பள்ளி வளாகத்தை குறி வைத்தே விற்பனை செய்யபடுகிறது. காரணம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வீட்டில் இருந்து பெற்றோர்களிடம் வாங்கி காசுகளை ஸ்னாக்ஸ்க்காக செலவு செய்கின்றனர்.

இந்நிலையில் திருமயம், அரிமளம் சுற்றுவட்டார கடைகளுக்கு அறந்தாங்கி, கீழச்சேவல்பட்டி, காரைக்குடி, ராங்கியம், பொன்னமராவதி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிசை தொழிலாக முருக்கு, மிக்சர், காராசேவு, காராபூந்தி, குழல் வடிவ நொறுக்கு தீனி உள்ளிட்ட ஸ்னாக்ஸ் வகைளை உற்பத்தி செய்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து வினியோகம் செய்யப்படுகிறது.

இதில் பெரும்பாலான பாக்கெட்டுகளில் ஸ்னாக்ஸ் தாயரிப்புக்கு பயன்படுத்திய மூல பொருட்கள், தாயாரிப்பு தேதி, காலாவதி ஆகும் தேதி, தயாரிப்பவர் முகவரிகள் குறிப்பிடுவதில்லை. அதே சமயம் ஒரு சில தயாரிப்பாளர்கள் ஸ்னாக்ஸ் தயாரிப்பு பற்றி விளக்கத்தை ஸ்னாக்ஸ் பாக்கெட்டுகளின் வெளியில் வைத்த தைத்துள்ளனர். காரணம் ஒரு வேலை குறிப்பிட்ட தேதிக்குள் பொருள் விற்பனையாகவில்லை என்றால் தாயாரித்த தேதியை மாற்ற வாய்புள்ளது.

இதனால் வினியோகஸ்தினரிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் தின்பண்டம் காலாவதியான பின்பும் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்னாக்ஸ் கலருக்காவும், மொருமொருப்பாக இருக்கவும் கலர் பொடிகள், சோடா பவுடர்கள் அதிகமாக சேர்க்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை வாங்கி சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்புள்ளது.

இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பெரும்பாலான குழந்தைகள் சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி கடைகளில் தரமான ஸ்னாக்ஸ் வககைள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமம் மற்றும் பள்ளியாக சென்று மாணவர்கள், பெற்றோர்களிடையே எண்ணெயில் பொரித்த உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது பற்றி அரசு மருத்துவர்களிடம் கேட்ட போது:ஸ்னாக்ஸ் எனும் நொறுக்கு தீனிகள் குழந்தைகளுக்கு வயிறு சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகிறது. உதாரணமாக எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உருவாக்குகிறது.

இதனால் குழந்தைகளுக்கு பசியின்மை ஏற்பட்டு உடல் எடை குறையவோ, அதிகரிக்கவோ செய்யும். சிறு வயதில் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது வளரும் பருவத்தில் உடல் வளர்ச்சி, வயிறு உள்ளிட்டவைகளில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும்.

தற்போது சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்படைவதற்கு பொரித்த உணவுகள் ஒரு காரணமாக உள்ளது. எனவே பெற்றோர்கள் எண்ணெயில் பொரித்த உணவை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதை தவிர்த்து பழங்கள், வேக வைத்த உணவு உண்ண குழந்தைகளை பழக்கபடுத்த வேண்டும் என்றனர்.

திருமயம் பகுதி பெற்றோர்களிடம் கேட்ட போது:25 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிகள் அருகே வயதான பாட்டிகள் கடைகள் போட்டு பள்ளி மாவர்களிடம் வியாபாரம் செய்தனர். அப்போது பனங்கிழங்கு, மா, பலா, சக்கரவள்ளி, மரவள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கிடைக்கும் கிழங்கு வகைகளை அவித்து விற்பனை செய்தனர். மேலும் கடலை மிட்டாய், கமர்கட்டு உள்ளிட்ட நாட்டு சர்க்கரையில் தயாரித்த உடலுக்கு ஆரோக்கிய தரக்கூடிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது அது தலைகீழா மாறியுள்ளது. குழந்தைகளுக்கு எதை வாங்கி கொடுப்பது என குழப்பமாக உள்ளது. இருந்த போதிலும் குழந்தைகள் நொறுக்கு தீனிகளையே அதிகம் விரும்புகின்றனர். குழந்தைகளை மயக்கும் வகையில் கலர் கலராக தயாரித்து நொறுக்கு தீனிகளை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் நொறுக்கு தீனி வாங்கி சாப்பிடாத என குழந்தைகளை கண்டித்தாலும் பள்ளிகளில் பெற்றோர்களுக்கு தரியாமல் வாங்கி உண்ணும் போது தடுக்க முடியவில்லை என்றனர்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தின்பண்டங்கள் விற்கப்பட்டு வருகிறது. ஆனால் இது பற்றி எதுவுமே தெரியாதது போல அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். பள்ளி மாணவர்களின் நலனை காப்பதில் அரசு, அரசு அதிகாரகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் இது எதையும் அரசு அதிகாரிகள் கடை பிடிப்பதாக தெரியவில்லை.

எனவே இனிமேலும் அதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர் கால சந்ததியினரை ஓரளவுக்கு நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதே அரிமளம், திருமயம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது அரிமளம், திருமயம் பகுதிகளில் உள்ள தின்பண்டம் தயாரிக்கும் இடம் விற்பனை, செய்யும் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கையை எழுந்துள்ளது.

Related Stories: