×

தைரியம் இருந்தால் சாதனை பட்டியலை வெளியிடுங்கள்: எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் சவால்; இந்தியாவிலேயே தமிழ்நாடு தனிக்காட்டு ராஜா என பெருமிதம்

கள்ளக்குறிச்சி: எந்த துறையை எடுத்து கொண்டாலும் சாதனைகள்தான். இந்தியாவிலேயே தமிழ்நாடு தனிக்காட்டு ராஜாதான். திமுக ஆட்சியில் செய்த திட்டங்களில் 5% அதிமுக ஆட்சியில் செய்து இருப்பீர்களா?. தைரியம் இருந்தால் பட்டியலை வெளியிடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அரசுத் துறைகளின் சார்பில் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் களஆய்வு செய்ய நேற்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உளுந்தூர்பேட்டை அருகே எ.சாத்தனூர் என்ற இடத்தில் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.2.302 கோடி மதிப்பில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் ‘பௌ-சென்’ காலணி உற்பத்திக்கான ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் பயன்பாட்டுக்காக, கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் 38.15 ஏக்கரில் ரூ.139 கோடியே 41 லட்சம் மதிப்பில் 8 தளங்களை கொண்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார். புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட ரூ.1,773.67 கோடி செலவிலான 2,559 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 386 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் பல்வேறு துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு 1,045 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் அரசு என்பது சாதனைத் திட்டங்களின் அரசு. சிலர் வாயிலேயே வடை சுடுகிறார்களே, அவர்களைப் போல இந்த அரசு அல்ல. மக்களுக்கு நேரடியாக பயன் தரக்கூடிய திட்டங்களை நிறைவேற்றி, மக்களை நேரடியாக சந்திக்கின்ற திறன்கொண்ட அரசு, இந்த அரசு. பெற்றோரை இழந்த 143 குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடியாக அமைவதை அன்புக்கரங்கள் திட்டத்தில் உறுதி செய்திருக்கிறோம்.
இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்தில், வேலை கிடைக்க வேண்டும் என்று நான் தொடங்கிய திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்.

அந்தத் திட்டத்தில், நேற்று முன்தினம் கூட நாமக்கல்லை சேர்ந்த கமலி என்பவர் எஸ்பிஐ வங்கிப் பணியாளராக தேர்வு பெற்றிருக்கிறார். அவர்கள் தந்தை நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். நான் முதல்வன் திட்டத்தால், தங்கள் வாழ்க்கையே மாற்றம் பெறுவதை நினைத்து, அவர்கள் மகிழ்ந்ததை தொலைக்காட்சிகளில் நீங்களும் பார்த்திருப்பீர்கள். அந்த நான் முதல்வன் திட்டத்தில், திறன் பயிற்சி பெற்று, இந்தக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், 3 ஆயிரத்து 834 நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கிறது.

இப்படி, வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்று எந்த பாகுபாடும் பார்க்காமல், அனைத்து மாவட்டங்களுக்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற ஆட்சியாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு சாட்சிதான், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா என்பதுபோல, நாம் பெற்றுள்ள 11.19 விழுக்காடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி. ஜிஎஸ்டிபி-லேயும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன்.

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியா, ஆட்டோமொபைல் உற்பத்தியா, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியா, ஸ்டார்ட்-அப் தரவரிசையா, எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் லீடர்! இங்கே அதிகமான பெண்கள் வந்திருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும், நாளைக்கு நீங்கள் அவரவர்கள் வேலைக்கு சென்று விடுவீர்கள். இப்படி, இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரிவது நம்முடைய தமிழ்நாட்டில்தான். ‘எல்லார்க்கும் எல்லாம்’, ‘அனைத்து மாவட்ட வளர்ச்சி’ என்று சொல்வது சும்மா இல்லை.

வறுமை இல்லாத, பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் என்று தமிழ்நாடு இன்றைக்கு பெயர் வாங்கியிருக்கிறது. ஒன்றிய அரசின் தரவுகளின்படி, இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமும் தமிழ்நாடுதான். அதுமட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஈசியாக ஏறுவதற்கு தாழ்தள பேருந்துகள், மின் பேருந்துகள், ஏசி பேருந்துகள், அண்மையில், நான் துவக்கி வைத்த ‘வோல்வோ’ பேருந்துகள் என்று இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்தைக் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடுதான் இருக்கிறது.

இந்தியாவிலேயே விளையாட்டு மேம்பாட்டில் சிறந்த மாநிலம் என்று ஸ்போர்ட் ஸ்டார் விருதையும் தமிழ்நாடு தான் பெற்றிருக்கிறது. தென்கோடி மாநிலங்களிலும், பெரு நிறுவனங்களின் முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் நிலை நகரங்களிலும், நியோ டைடல் பூங்காக்கள் அமைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் புதிய மருத்துவமனைகள், பூங்காக்கள் திறக்கப்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சித் திட்டங்களோடு, நம்முடைய வரலாற்றுப் பெருமையை உலகத்திற்கு எடுத்துச் சொல்கின்ற வகையில், இரும்பின் தொன்மை பற்றிய ஆய்வு, கீழடி அருங்காட்சியக திறப்பு, பொருநை அருங்காட்சியகம் திறப்பு, வள்ளுவர் கோட்டம் மற்றும் விக்டோரியா ஹால் சிறப்பான முறையில் புதுப்பிப்பு போன்றவற்றையும் செய்திருக்கிறோம். கங்கை கொண்ட சோழபுரத்திலும், தஞ்சாவூரிலும் புதிய அருங்காட்சியகங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது.

முதல்வர் படைப்பகங்கள் கட்டப்பட்டு, குறைந்த விலையில் ஆபீஸ் ஸ்பேஸ் அமைத்து வழங்கியிருக்கிறோம். வேலைக்குச் சென்று கொண்டிருக்கக்கூடிய பெண்களுக்காக தோழி விடுதிகள், வீட்டில் தனியாக இருக்கின்ற முதியோர்களை பார்த்துக் கொள்வதற்கு அன்புச்சோலை இல்லங்கள், குழந்தைகள் தெம்பாக வளர ஊட்டச்சத்தை உறுதி செய். மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், இடஒதுக்கீடு என்ற சாதனைத் திட்டத்தை நிறைவேற்றி இந்தியாவுக்கே முன்மாதிரியாக நம்முடைய திராவிட மாடல் அரசு திகழ்கிறது.

ஆதிதிராவிட மக்கள் தொழில்முனைவோராக உயர, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். எந்த அரசும் செய்யாத சாதனையாக 4 ஆண்டுகளில், சுமார் 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு. சிறுபான்மை மக்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம். மதவெறி கும்பலுக்கு பயப்படாமல் வாழுகின்ற அமைதியான, நிம்மதியான சூழலை, இங்கே ஏற்படுத்தி இருக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும், வாழ்நாள் கனவு என்பது சொந்தமாக ஒரு நிலம். கள்ளக்குறிச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும், அதிக எண்ணிக்கையிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி, நிலம் எனும் அதிகாரத்தை எளிய மனிதர்களுக்கு வழங்கியிருக்கிறோம்.அடுத்து, 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க இருக்கிறோம்.

அதுவும், ஏ.ஐ. என்கின்ற செயற்கை நுண்ணறிவு சந்தாவுடன் வழங்க இருக்கிறோம். சொல்லச் சொல்ல மூச்சு வாங்குகின்ற அளவுக்கு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். இதில், எதையுமே திராவிட மாடலுக்கு எதிரானவர்கள் கூட மறுத்துப்பேச முடியாது. அனைத்துமே ப்ரூவன் ட்ராக் ரெக்கார்டு. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், சாதனைகள் – ஒன்றிய அரசு வெளியிடும் தரவரிசைகள் எல்லாவற்றிலும், நம்பர் ஒன் ரேங்க் நாம்தான் – உலக அளவிலான விருதுகள் என்று நெஞ்சை நிமிர்த்தி, காலரை தூக்கி நடப்பதுபோல, தமிழ்நாடு இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. நான் கேட்கிறேன், இதில் 5 சதவிகிதமாவது அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததா?, அவர்களால் சொல்ல முடியுமா.

இது என்னுடைய ஓப்பன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் சொல்லுங்கள். 5 சதவிகிதம் கூறுங்கள். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், பாழாய்போன தமிழ்நாடு, திராவிட மாடலின் 4ஆண்டு காலங்களில், துள்ளிக் குதித்து இன்றைக்கு எழுந்திருக்கிறது. இனி நமக்கு எப்போதும் ஏறுமுகம்தான். ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் மீறி அவர்களின் உதவி இல்லாமல், இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு வளரவே கூடாது என்று அவர்கள் அமைக்கின்ற ஸ்பீட்- பிரேக்கரை எல்லாம் தாண்டிதான், இந்த இடத்தில் நாம் நிற்கிறோம். ஆனால், “இது எதையுமே பார்க்க மாட்டோம், செய்திகளை படிக்க மாட்டோம், உண்மையை பேச மாட்டோம், தமிழ்நாட்டின் சாதனைகளைப் பற்றி வாயே திறக்க மாட்டோம்” என்று சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது, நீங்கள் இப்படியே கண்ணை மூடிக் கொண்டிருங்கள். நாங்கள் அடித்து தூள் கிளப்பி சென்று கொண்டே இருப்போம்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

* ஒன்றிய அரசின் தரவுகளின்படி, இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கிய மாநிலமும் தமிழ்நாடுதான்.
* மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியா, ஆட்டோமொபைல் உற்பத்தியா, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியா, ஸ்டார்ட்-அப் தரவரிசையா, எல்லாவற்றிலும் தமிழ்நாடுதான் லீடர்.
* வறுமை இல்லாத, பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் என்று தமிழ்நாடு இன்றைக்கு பெயர் வாங்கியிருக்கிறது.
* வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என்று எந்த பாகுபாடும் பார்க்காமல், அனைத்து மாவட்டங்களுக்கும் அவர்களின் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

Tags : P. K. Stalin ,Tamil Nadu ,India ,Dima ,K. Stalin ,
× RELATED 5.08 கோடி யூனிட் மின் உற்பத்தி; சூரிய...