குருகிராம்: குருகிராமில் உள்ள கேளிக்கை விடுதியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நடன மங்கை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள எம்.ஜி. சாலையில் செயல்பட்டு வரும் இரவு நேர கேளிக்கை விடுதியில் கல்பனா (25) என்ற பெண் நடனக் கலைஞராக பணியாற்றி வருகிறார். டெல்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த துஷார் என்கிற ஜான்டி (25) என்பவர் கடந்த 6 மாதங்களாக கல்பனாவிடம் பழகி வந்ததுடன், கணவரை பிரிந்து விட்டு தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இதற்கு கல்பனா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த துஷார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நஜப்கர் பகுதியில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி அதிகாலை கிளப்பிற்கு வந்த துஷார், மீண்டும் திருமண வற்புறுத்தலில் ஈடுபட்டபோது கல்பனா மறுத்ததால், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரது வயிற்றில் சுட்டுவிட்டு தப்பியோடினார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கல்பனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கல்பனாவின் கணவர் அளித்த புகாரின் பேரில் செக்டார் 29 காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் பரூத் பகுதியில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி துஷார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஷுபம் குமார் என்கிற ஜானி (24) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
