- பாஜக
- குஜராத்
- காந்திநகர்
- குஜராத் சட்டப்பேரவை
- துணை பேச்சாளர்
- ஜெதாபாய் அஹிர்
- ஜெதாபாய் அஹிர்
- குஜராத் மாநிலம் ஷீரா
- ஜெதாபாய் பரவாட்
காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜேதாபாய் ஆஹிர் பணிச்சுமை காரணமாக தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலம் ஷேரா தொகுதியில் இருந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜேதாபாய் ஆஹிர் என்கிற ஜேதா பர்வாட். இவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் குஜராத் சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்து வந்தார். இதற்கிடையே, கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சியில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற பாஜகவின் கொள்கையின் அடிப்படையிலும், தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பின் தலைவராக இருப்பதாலும், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய நிர்பந்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காந்திநகரில் உள்ள சபாநாயகர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது, சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் ஜேதாபாய் ஆஹிர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்நிகழ்வின் போது மாநில முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் ஜெகதீஷ் விஸ்வகர்மா ஆகியோர் உடனிருந்தனர்.
பணிச்சுமை மற்றும் பிற பொறுப்புகள் காரணமாக பதவி விலகுவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கூட்டுறவுத் துறையில் அதிக பணிகள் மற்றும் பயணங்கள் இருப்பதால் சட்டப்பேரவை பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை; எனவே பதவி விலகுகிறேன்’ என்று தெரிவித்தார். இவரது ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
