×

அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவில் பாடகர் ஓட்டம்: பாதுகாப்பு வேலிகளை ரசிகர்கள் உடைத்ததால் பதற்றம்

 

குவாலியர்,: மத்தியப் பிரதேசத்தில் வாஜ்பாய் நூற்றாண்டு விழாவில் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக பாடகர் கைலாஷ் கெர் தனது இசை நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தினார். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் காலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டபோது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், மாலையில் பிரபல பாடகர் கைலாஷ் கெர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

கைலாஷ் கெர் பாடிக் கொண்டிருந்த போது, திடீரென கட்டுக்கடங்காத கூட்டம் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கிப் பாய்ந்தது. ரசிகர்கள் சிலர் மேடையிலேயே ஏறி பாடகரை நெருங்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடும் அதிருப்தியடைந்த கைலாஷ் கெர் மைக்கை பிடித்து, ‘இந்தத் தருணத்தில் நீங்கள் மிருகங்களைப் போல நடந்து கொள்கிறீர்கள்’ என்று கூட்டத்தைப் பார்த்து ஆவேசமாகத் திட்டினார். இசைக் கருவிகள் மற்றும் கலைஞர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானதாலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு இல்லாததாலும் அவர் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தினர். முக்கியத் தலைவர்கள் வந்தபோது இருந்த பாதுகாப்பு, மாலையில் இல்லாததே இந்தச் குளறுபடிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Tags : Singer ,Vajpayee ,Amit Shah ,Gwalior ,Kailash Kher ,Madhya Pradesh ,Gwalior, Madhya Pradesh… ,
× RELATED உத்தரப் பிரதேசத்தில் ஆன்லைன் வணிக...