அம்பானி, அதானியின் கைகளில் இந்திய பொருளாதாரம்; உற்பத்தியை முடக்கி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு: ஜெர்மனியில் ராகுல் காந்தி ஆவேசம்

 

பெர்லின்: இந்தியாவில் உற்பத்தித் துறையை முற்றிலுமாக நசுக்கிவிட்டு வர்த்தகத்தை மட்டுமே ஒன்றிய அரசு ஊக்குவிப்பதாக ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, வெளிநாட்டுப் பயணங்களின் போது ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜெர்மனிக்குச் சென்றுள்ள அவர், மியூனிக் நகரில் உள்ள பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலையைப் பார்வையிட்ட பிறகு, இன்று பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘இந்தியாவில் உற்பத்திக்கான ஊக்கத்தை ஒன்றிய அரசு முற்றிலுமாக அழித்துவிட்டது. பணமதிப்பிழப்பு மற்றும் தற்போதைய ஜிஎஸ்டி வரிமுறை போன்றவை உற்பத்தியாளர்களுக்கு எதிரானவையாக உள்ளன.

மேலும், அம்பானி, அதானி போன்ற சில பெரும் பணக்காரர்களின் கைகளில் நாட்டின் பொருளாதாரம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்யாமல் வர்த்தக நிறுவனங்களாக மட்டுமே செயல்படுகின்றனர். பொருட்களின் உற்பத்தியை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டு இறக்குமதியை நம்பியிருப்பதால், இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டது’ என்று அவர் கவலை தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக, இது முழுக்க முழுக்க போலியான செய்தி என்று மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் உற்பத்தித் துறை அபரிமிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி 495 சதவீதமும், அதன் ஏற்றுமதி 760 சதவீதமும் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

மேலும், 1991ம் ஆண்டிலிருந்து வாகன உற்பத்தி 14 மடங்கு உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக 2014 முதல் 2024 வரையிலான காலத்தில் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருப்பதில் உற்பத்தித் துறையின் பங்கு மிக முக்கியமானது என்று அக்கட்சி விளக்கமளித்துள்ளது.

Related Stories: