லண்டன்: இங்கிலாந்தில் தனது மனைவிக்கு போதை மருந்து கொடுத்து 13 ஆண்டுகளாக நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ஸ்விண்டன் பகுதியைச் சேர்ந்த கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பிலிப் யங் (49). இவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். இதனிடையே தனது மனைவி ஜோன் யங் (48) என்பவருக்கு உணவு மற்றும் பானங்களில் போதை மருந்து கலந்து கொடுத்து, அவர் மயக்கத்தில் இருக்கும்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை சுமார் 13 ஆண்டுகளாக தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொடுமையை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது அடையாளத்தை மறைக்க விரும்பாமல் தாமாக முன்வந்து அளித்த புகாரின் பேரில், பிலிப் யங் மீது கற்பழிப்பு, ஆபாச படம் எடுத்தல், சிறார்களின் ஆபாச படங்கள் வைத்திருத்தல் என மொத்தம் 56 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதக செயலுக்கு உடந்தையாக இருந்து அப்பெண்ணை சீரழித்ததாக நார்மன் மேக்சோனி, டீன் ஹாமில்டன், ரிச்சர்ட் வில்கின்ஸ், கானர் சாண்டர்சன் மற்றும் முகமது ஹாசன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்விண்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட பிலிப் யங் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், உலகையே உலுக்கிய பிரான்ஸ் நாட்டின் பெலிகோட் வழக்கை போன்று இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
