எப்ஸ்டீன் வழக்கில் 30,000 பக்க ஆவணம் வெளியீடு; அதிபர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு: அமெரிக்காவில் பரபரப்பு

 

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜெப்பிரி எப்ஸ்டீன் பாலியல் வழக்கில் வெளியிடப்பட்ட புதிய ஆவணங்களில் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய கோடீஸ்வரர் ஜெப்பிரி எப்ஸ்டீன், சிறையில் இருந்தபோதே தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான விசாரணை ஆவணங்களை நீதிமன்ற உத்தரவின்படி அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 3வது கட்டமாக சுமார் 30,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ ‘தி இன்விசிபிள் மேன்’ என்ற பெயரில் எப்ஸ்டீனின் உதவியாளர் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பியது மற்றும் எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் போலி கடிதங்கள் குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, கடந்த 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எப்ஃபிஐ அமைப்புக்கு வந்த புகார் ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘1990ம் ஆண்டுகளில் டிரம்பும் (தற்போதைய அதிபர்), எப்ஸ்டீனும் சேர்ந்து எனது முன்னாள் காதலியை பாலியல் வன்கொடுமை செய்தனர்’ என்று லிமோசின் கார் ஓட்டுநர் ஒருவர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 1993ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை டிரம்ப் 8 முறை எப்ஸ்டீனின் தனி விமானத்தில் பயணம் செய்ததற்கான குறிப்புகளும் இந்த ஆவணத்தில் உள்ளன. இருப்பினும், ‘இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை’ என்று அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து டிரம்ப் தரப்பில், ‘இது ஜனநாயகக் கட்சியினர் நடத்தும் நாடகம்’ என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: