மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்ய மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா மேடை மாடு பிடி வீரர்களுக்கான காலரி, தடுப்பு வேலி அமைக்கப்பட உள்ளது. ஏற்பாடு பணிகளை செய்வதற்கு ரூ.62.17 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி வழக்கம்போல தைப் பொங்கல் திருநாளன்று, ஜனவரி 15ம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் போட்டி நடைபெற உள்ள நிலையில், அவனியாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்துதல் மற்றும் நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகள் தீவிரமாக அளிக்கப்பட்டு வருகின்றன.
2026 ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காளைகளுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் வீரர்களுக்கான தகுதிச் சான்றிதழ்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகப் பிரத்யேக இணையதளத்தை மாவட்ட நிர்வாகம் தயார் செய்து வருகிறது. அவனியாபுரம் வாடிவாசல் மற்றும் பார்வையாளர் மாடங்களைச் சீரமைக்கும் பணிகள் இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்ய, முக்கியமாக பாதுகாப்பு வேலிகள் (barricades), கம்பி வேலி அமைத்தல், மேடை அமைத்தல், மாடு பிடி வீரர்களுக்கான காலரி, போன்ற பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
ஏற்பாடு பணிகளை செய்வதற்கு ரூ.62.17 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு பணிகளுக்கு 4 லட்சத்து 81 ஆயிரம் என மொத்தம் 66 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
