×

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.3800 கோடி நிவாரண உதவி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு

கொழும்பு: டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா ரூ.3800 கோடி மதிப்புள்ள உதவித் தொகுப்பை முன்மொழிந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இதில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமான வீடுகள் நாசமாகின. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சாகர்பந்து என்ற நடவடிக்கையின் கீழ் இந்தியா உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கியது.

இதனிடைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக நேற்று இலங்கை சென்றார். அதிபர் அனுர குமார திசா நாயக்கரை சந்தித்த அவர், பிரதமர் மோடி வழங்கிய கடிதத்தை அவரிடம் வழங்கினார். தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஹரினி அமரசூரியாவையும் சந்தித்து இலங்கையின் புனரமைப்பு பணிகளுக்கு இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜய்த ஹேரத்துடனும் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் 120 அடி நீளமுள்ள இரட்டை வழித்தட பெய்லி பாலத்தை திறந்து வைத்தனர்.

110 டன் எடையுள்ள இந்த பாலம் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு இந்தியா சார்பில் ரூ.3800 கோடி மதிப்புள்ள உதவித்தொகையை இந்தியா முன்மொழிந்துள்ளது. இதில் ரூ.2,900 கோடி சலுகைக் கடன் வசதிகள் மற்றும் ரூ.900 கோடி மானியங்கள் அடங்கும்.

* தமிழ் தலைவர்களை சந்தித்தார் ஜெய்சங்கர்
இலங்கை சென்றுள்ள ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத் தலைவர்களைச் சந்தித்தார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்பட பலருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,’கொழும்பில் இந்திய வம்சாவளித் தமிழ் சமூகத் தலைவர்களைச் சந்தித்தேன். டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தங்கள் மதிப்பீடுகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். எங்களின் முன்மொழியப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைத்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : External Affairs ,Minister ,S Jaishankar ,Titva ,Sri Lanka ,Colombo ,External Affairs Minister ,India ,Cyclone Titva ,
× RELATED இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா...