×

நியூசி. வெளியுறவு அமைச்சர் எதிர்ப்பு இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் மோசமானது

வெலிங்டன்: ‘இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நியாயமானதல்ல, அது மோசமானது’ என நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் விமர்சித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து இடையே 100 சதவீத வரி விலக்குடன் கூடிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்தம் இன்னும் 3 மாதத்தில் கையெழுத்தாக இருப்பதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் லக்சனும் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில், நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த ஒப்பந்தம் சுதந்திரமானதோ, நியாயமானதோ அல்ல. துரதிஷ்டவசமாக இது நியூசிலாந்துக்கு ஒரு மோசமான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய தயாரிப்புகளுக்கு நியூசிலாந்து தனது சந்தையை முழுமையாக திறக்கிறது. ஆனால் நியூசிலாந்தின் முக்கிய பால் ஏற்றுமதிக்கு மட்டும் இந்தியா வரி விதித்துள்ளது.

உள்நாட்டு விவசாயிகள் நலன் கருதி, பால் பொருட்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்படவில்லை. இதுதவிர, இந்தியர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு விசாவை உருவாக்குவது உட்பட குடியேற்ற சலுகைகள் கவலை அளிக்கின்றன. உள்நாட்டில் தற்போது பொருளாதார அழுத்தங்கள் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடனான ஒப்பந்தங்களை காட்டிலும் இந்தியாவிற்கு தொழிலாளர் சந்தையில் அதிக அணுகலை வழங்கப்பட்டுள்ளது.

இவை எதிர்கால அரசுகள் தடுக்கக் கூடும். எனவே இந்த ஒப்பந்தம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் வரும் போது, ஆளும் கூட்டணியில் உள்ள எங்கள் நியூசிலாந்து பர்ஸ்ட் கட்சி எதிர்த்து வாக்களிக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* முதல் முறையாக நியூசி. ஆப்பிளுக்கு வரி விலக்கு
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் நியூசிலாந்து ஆப்பிள்கள், கிவிப்பழம், தேனுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டதுடன் அவை இந்தியாவின் விவசாய உற்பத்தி திறன் செயல் திட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் செயல்பாடு கூட்டு விவசாய உற்பத்தி திறன் கவுன்சிலால் கண்காணிக்கப்படும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் ஆப்பிள்களுக்கு வரிச்சலுகை பெறும் முதல் நாடு நியூசிலாந்து என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் கிவிப்பழத்திற்கும் 100 சதவீத வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப்பழங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

Tags : New Zealand ,India ,Wellington ,Foreign Minister ,Winston Peters ,
× RELATED இந்தியர்கள் அதிகம் பேர் சுற்றுலா...