களக்காடு அருகே 100 ஆண்டுகளாக பயன்படுத்திய கால்வாய்க்கு செல்லும் பாதை அடைப்பு

*பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

*அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்

களக்காடு : களக்காடு அருகே செங்களாகுறிச்சி கால்வாய்க்கு செல்லும் பாதை திடீரென அடைக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

களக்காடு அருகேயுள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மேல சேனி பத்து பகுதி உள்ளது. இங்கு செங்களாகுறிச்சி கால்வாய் உள்ளது. மேலும் திருக்குறுங்குடி குளத்திற்கு தண்ணீர் திறக்கும் ஷட்டரும் உள்ளது. பொதுமக்களும் அங்கு சென்று குளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலசேனி பத்து பகுதிக்கு செல்லும் பாதையை தனிநபர் திடீரென அடைத்ததாக கூறப்படுகிறது. பாதை அடைக்கப்பட்டதால் செங்களாகுறிச்சி கால்வாய்க்கும், அங்குள்ள விளைநிலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து செங்களாகுறிச்சி கால்வாயில் தண்ணீர் திறக்க செல்ல முடியாத நிலையும் உருவானது. இந்த கால்வாய் மூலம் 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகிறது.

இதற்கிடையே பாதை அடைக்கப்பட்டதை கண்டித்து நேற்று மலையடிபுதூர், மாவடி, வடுகட்சிமதில் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதை அடைக்கப்பட்ட நெல்லி தோப்பு பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவலின் பேரில் திருக்குறுங்குடி இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி, வருவாய்துறையினர், போலீசார் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்களிடம் பொதுமக்கள், ‘100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தும் பாதையை திறக்க வேண்டும்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வருவாய்துறையினரின் ஆவனங்களில் அந்த இடம் திருக்குறுங்குடி மடத்திற்கு சொந்தமான இடம் என்று கண்டறியப்பட்டதால் போலீசார் திருக்குறுங்குடி மடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மடத்தின் நிர்வாகிகள் பாதையை திறக்க ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பாதை திறக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: