சத்தியமங்கலம் : ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியில் இருந்து ஈரோடுக்கு கோழி தீவனம் பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது.
லாரியை சத்தியமங்கலத்தை சேர்ந்த ஓட்டுநர் முருகன் (53) ஓட்டினார். லாரி ஆசனூர் அடுத்துள்ள தமிழக கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சாலை வளைவில் திரும்பும்போது லாரியில் பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் முருகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த ஆசனூர் போலீசார் ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி சாலையோரம் கவிழ்ந்ததால் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பின்றி இயல்பாக வாகனங்கள் பயணித்தன. கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
