×

வன உரிமைச் சட்டப்படி காணி இன மக்களுக்கு 10 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்

*கலெக்டரிடம் மனு

நாகர்கோவில் : காணிகாரர்கள் மகாசபை சார்பில் அதன் தலைவர் ராஜன் காணி தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டத்தில் தோவாளை, திருவட்டாறு, விளவங்கோடு ஆகிய மூன்று தாலுகாக்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காணி இன பழங்குடியின மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் பேச்சிப்பாறை ஊராட்சி, கடையல், பொன்மனை பேரூராட்சிகள், சுருளோடு, தடிக்காரன்கோணம் ஊராட்சி பகுதிகளில் வசித்து வருகின்றனர். முந்தைய திருவிதாங்கூர் அரசாங்கம் செம்பு பட்டயம் மூலம் நில உரிமை செய்து பழங்குடியின காணி சமூக மக்களுக்கு நில உரிமை பதிவு செய்து வழங்கியுள்ளது. செம்பு பட்டா மூலம் வழங்கப்பட்ட நிலப்பரப்புகளில் காணி மக்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.

பழங்குடியினர் இந்திய வனப் பரப்புகளில் வாழ்ந்து வரும் இடங்களில் அதிகபட்சம் 10 ஏக்கர் வரை நிலம் அங்கீகரித்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2009ம் வருடம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 20 வரை 645 குடும்பங்கள் வீட்டுக்கான நில உரிமை வழங்க கேட்டு பத்மநாபபுரம் சார் ஆட்சியரிடம் விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்டு 349 நபர்களுக்கு குடியிருப்பு பயன்பாட்டுக்காக அதிகபட்சம் 10 சென்ட் வீதம் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாய நில உரிமைக்காக அங்கீகரிக்கப்பட்ட 995 நபர்கள் விண்ணப்பித்ததில் 90 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை நிலுவையில் உள்ளது. 2005க்கு முன்னர் வன நிலத்தை அனுபவித்து வாழ்ந்து வருபவர்களுக்கு அதிகபட்சம் 10 ஏக்கர் நில உரிமை வழங்க வேண்டும்.

திருவிதாங்கூர் அரசு நிலவரி நீக்கி தானமாக காணியின மக்களுக்கு வழங்கிய செம்பு பட்ட நிலப்பரப்பு முழுவதும் வன உரிமைகள் சட்டப்படி பழங்குடி காணி இன மக்களுக்கு உரிமை பெற்றது ஆகும். எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Collector ,Nagercoil ,Landowners Mahasabha ,Rajan Kani ,Thovalai ,Thiruvattaru ,Vilavancode ,Western Ghats ,Kumari ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி...