×

குறுகிய சாலைகளால் திணறும் வாகனங்கள் ஆபத்தாக மாறி நிற்கும் சென்டர் மீடியன்கள்

*தொடர் விபத்துக்களால் பொதுமக்கள் பீதி

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ஆபத்தாக மாறி நிற்கும் சென்டர் மீடியன்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் 1,295 கி.மீ. தூரம் நெடுஞ்சாலைகள் உள்ளன. இது தவிர 36 கி.மீ. தூரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலைகள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் பராமரிப்பு செய்யப்படுகின்றன. விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு விபத்துக்கள் அதிகம் நடந்த பகுதிகளில் மேற்ெகாள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படுகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் நடந்ததாக கூறப்படும் 70 இடங்கள் பிளாக் ஸ்பாட் ஆக உள்ளன. கடந்த ஆண்டுகளில் 35 ஆக இருந்த இந்த எண்ணிக்ைக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக விபத்துக்கள் நடந்த பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. காவல்துறை அளிக்கும் பட்டியல் படி விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்களை குறைக்க போலீசார், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைககள் எடுக்கப்பட்டாலும், சென்டர் மீடியன்கள் வைப்பது முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது.

நெடுஞ்சாலைகளில் எதிரெதிரே வாகனங்கள் மோதி விபத்துக்கள் நடப்பதை தடுக்க, சென்டர் மீடியன்கள் வைக்கப்படுகின்றன. மாவட்டத்தில் 35 இடங்களில் நீண்ட அளவில் சென்டர் மீடியன்கள் உள்ளன. காவல்கிணறு – பார்வதிபுரம், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் நெடுஞ்சாலைகள் , மாவட்டத்துக்குள் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் சென்டர்கள் மீடியன்கள் இருக்கின்றன.

இந்த வகையிலான சென்டர் மீடியன்களை சுமார் 2 அடி உயர கான்கிரீட் கற்கள் கொண்டு அமைத்துள்ளனர். இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களில் ஒளிரும் விளக்குகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.முக்கிய திருப்பங்கள், சந்திப்புகள் உள்ள சாலையில் சென்டர் மீடியன்கள் இருப்பதன் மூலம் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து செல்ல வசதியாக உள்ளது.

ஆனால் இந்த சென்டர் மீடியன்களால் விபத்துக்களும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் சென்னையில் இருந்து வந்த ஆம்னி பஸ் காவல்கிணறு – பார்வதிபுரம் சாலையில் தோவாளை அருகே சென்டர் மீடியனில் மோதி தலை கீழாக கவிழ்ந்து, 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இதே போல் சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்களில் வாகனங்கள் மோதி விபத்துக்கள் நடப்பது தொடர் கதையாகி உள்ளது.

இரவு நேரங்கள், அதிகாலை வேளைகளில் லாரிகள், டாரஸ் லாரிகள் இந்த சென்டர் மீடியன்களில் மோதி சேதம் அடைவதும், கவிழ்ந்து கிடப்பதும் அடிக்கடி அரங்கேறுகிறது. இது மட்டுமின்றி சில இடங்களில் சென்டர் மீடியன்கள் உள்ள பகுதியில் செல்லும் வாகனங்கள் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடமளிக்க வழியில்லாமல் விபத்துக்கள் அரங்கேறும் நிலை உள்ளது.

சென்டர் மீடியன்கள் வைப்பதற்கான அகலத்தில் சாலைகள் இல்லாமல் இருப்பது விபத்துக்கள் நடக்க காரணமாக உள்ளது. தற்போது உள்ள புதிய கனரக வாகனங்கள் அனைத்தும் அகலம் அதிகமானவையாக உள்ளன.

குறிப்பாக, டாரஸ் லாரிகள், புதிதாக வந்துள்ள தாழ்தள பஸ்கள், ஆம்னி பஸ்கள் எல்லாம் நீளம், அகலம் அதிகமாக உள்ளன. தாழ்தள பஸ்கள் 12 மீட்டர் நீளம் (பின்புற இன்ஜின்) கொண்டதாகும். இது போன்ற வாகனங்கள் ெசன்டர் மீடியன் பகுதிகளை கடக்க பெரும் சிரமம் அடைகின்றன.

சென்டர் மீடியன்கள் உள்ள பகுதியில் சாலையின் இரு பக்கமும் புதர்கள் நிறைந்துள்ளன. இதனால் பின்னால் வரும் வாகனங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் வழி விட முடிய வில்லை. இதனாலும் வாகனத்தின் பின்னால் இடித்து விபத்துக்கள் நடக்கின்றன. இந்த புதர்களை வெட்டி அகற்றி, சாலைகளை அகலப்படுத்தி எச்சரிக்கை கோடுகள் வரைந்து அதன் பின்னர் சென்டர் மீடியன்கள் வைக்கப்பட வேண்டும்.

குண்டும், குழியுமாக கிடக்கும் சாலைகள், குறுகிய சாலைகளில் சென்டர் மீடியன்களை மாற்ற வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. இரவு நேரங்களில் அதிக விபத்துக்களுக்கு சென்டர் மீடியன்களும் காரணமாக அமைகின்றன. எனவே சென்டர் மீடியன்கள் உள்ள பகுதியில் சாலை விரிவாக்கம், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள் ஆகும்.

அதிக வேகம், கவனக்குறைவு

எஸ்.பி. ஸ்டாலின் கூறுகையில் நோ ஹெல்மெட், நோ என்ட்ரி போன்ற விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 25 சதவீத விபத்துக்கள் குறைந்துள்ளன. குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது அபராதம், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளம் சிறார்கள் வாகனங்கள் ஓட்டினால், அவர்களின் பெற்றோர் மீதும் நடவடிக்கை பாய்கிறது. சென்டர் மீடியன்களை பொறுத்தவரை சரியான முறையில் வைப்பதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்படுகின்றன. கவனக்குறைவு, அதிக வேகம் விபத்துக்கள் நடக்க காரணமாக உள்ளன என்றார்.

செட்டிக்குளம் – வேப்பமூடு சாலையில் நெருக்கடி

காவல்கிணறு – பார்வதிபுரம், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் சாலை, அசம்பு ரோடு, பாலமோர் ரோடு, கருங்கல் – தக்கலை சாலை, குலசேகரம் – மார்த்தாண்டம் சாலை உள்ளிட்ட சாலைகளில் சென்டர் மீடியன்கள் உள்ள பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள புதர்களால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகிறார்கள். நாகர்கோவில் மாநகரில் சாலைகள் குறுகியதாக உள்ள நிலையில் சென்டர் மீடியன்கள் பெரும் சிரமத்தை உண்டாக்கி உள்ளன.

இதில் செட்டிக்குளத்தில் இருந்து வேப்பமூடு வரும் சாலை ஏற்கனவே குறுகிய சாலை ஆகும். இந்த சாலை திருப்பத்தில் சென்டர் மீடியன்கள் வைத்து ஒரு வழிப்பாதையாக்கி உள்ளனர். சென்டர் மீடியன்கள் உள்ள காரணத்தால் வாகனங்கள் திரும்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Nagercoil ,Kumari district ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி...