பெரம்பலூர், டிச. 23: பெரம்பலூரில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 90 பயனாளிகளுக்கு ரூ60.41 லட்சம் மிதிப்பிலான பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வழங்கினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்டக் கலெக்டர் மிருணாளினி, தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்கள் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்த மாவட்டக் கலெக்டர் தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறுவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்கக் கடன் உதவி, வீட்டு மனைப்பட்டா,விதவை உதவித் தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம்கோருதல்,கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்,கலைஞர் கனவுஇல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 485 மனுக்களை பொது மக்களிடமிருந்து மாவட்டக் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்குத் தலா ரூ.6 ஆயிரத்து 359 வீதம் ரூ.31 ஆயிரத்து 795 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் விபத்து நிவாரணமாக சிறுகாயமடைந்த 6 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரமும், படுகாயமடைந்த 39 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.19 லட்சத்து 50 ஆயிரமும், இறந்த 40 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் என ரூ.60 லட்சத்து 10 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.60 லட்சத்து, 41 ஆயிரத்து 795 க்கான நலத் திட்ட உதவிகளை மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சொர்ண ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், பொது மேலாளர் (தாட்கோ) கவியரசு, மாற்றுத் திறனாளிகள நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
