நாகப்பட்டினம், டிச.23: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாஸ்போர்ட் கிளை அமைக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் இப்ராஹிம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் இப்ராஹிம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், திட்டச்சேரி, ஏனங்குடி, மஞ்சக்கொல்லை, ஆழியூர், கூத்தூர், குருக்கத்தி, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, தோப்புத்துறை போன்ற ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஆன்மிக சுற்றுலா செல்வதற்காக பயணம் செல்கின்றனர். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக அதிகம் நகரும் பகுதிகளில் முக்கியமான பகுதியாக நாகப்பaட்டினம் உள்ளது. இதற்காக பாஸ்போர்ட் எடுக்க 40 முதல் 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்ட தலைமை அஞ்சல் நிலையம் மிகவும் பழமையான அஞ்சல் நிலையம் ஆகும். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்து இந்த அஞ்சல் நிலையம் செயல்படுகிறது.
அதேபோல் நாகப்பட்டினத்தில் கப்பல் போக்குவரத்து செயல்பட்டபோது இந்த அஞ்சல் நிலையம் வாயிலாக கப்பல் மூலம் அஞ்சல் சேவையை செய்த அஞ்சல் நிலையம் ஆகும். ஆனால் தற்போது வரை பாஸ்போர்ட் சேவை மையம் இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இதனால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நீண்ட தொலைவிற்கு செல்ல வேண்டியது உள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் நாகப்பட்டினத்தில் வசிப்பவர்கள் பாஸ்போர்ட் பெற பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பை சேர்ந்தவர்களும் சிரமமப்பட்டு வருகின்றனர். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சேவை அலுவலகம் அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
