ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த மயான இடம் மீட்பு

திருச்சி, டிச.23: திருச்சி செம்பட்டு சாலையில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த சுடுகாட்டுக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். திருச்சி-புதுக்கோட்டை சாலை செம்பட்டு பகுதியிலுள்ள சுடுகாட்டு சொந்தமான இடத்தை தனியார் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமித்து அனுபவித்து வந்துள்ளார். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடத்தை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் சுடுகாட்டுக்கு சொந்தமான இடத்தை அளந்து மீட்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகர நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி உதவி பொறியாளர் மணிமொழி தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பிரச்சினைக்குரிய இடத்தை அளவீடு செய்து, சுடுகாட்டுக்கு சொந்தமான 8 ஆயிரத்து 50 ச.அடி (18 சென்ட்) நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டனர். தொடர்ந்து எல்லைகளை பிரித்து உடனே வேலி அமைக்கும் பணியை துவங்கினர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மாநகராட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: