லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்தின் மவுங்கானுய் நகரில் நேற்று முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை, நியூசிலாந்து அணி, 323 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) புள்ளிப் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நியூசிலாந்து அணி, 77.78 சதவீத வெற்றியுடன் 2ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா அணி, 100 சதவீத வெற்றிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் தொடர்கிறது. தென் ஆப்ரிக்கா அணி, 75 சதவீத வெற்றியுடன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கை அணி 66.67 சதவீத வெற்றியுடன் 4, பாகிஸ்தான் 50 சதவீத வெற்றியுடன் 5, இந்தியா 48.12 சதவீத வெற்றியுடன் 6ம் இடத்தில் உள்ளன. தவிர, இங்கிலாந்து 7, வங்கதேசம் 8, வெஸ்ட் இண்டீஸ் 9ம் இடத்தில் உள்ளன.
