ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து படுதோல்வி; கோச் மெக்குலத்தை வீட்டுக்கு அனுப்புங்க: மாஜி வீரர் ஜெப்ரி பாய்காட் ஆவேசம்

 

லண்டன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2025-26 ஆஷஸ் தொடரில் 0-3 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி தொடரையும் இழந்துவிட்டது. இந்த மோசமான தோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் ஜாம்பவானான ஜெப்ரி பாய்காட் கூறியதாவது: இவர்களிடம் பொது அறிவை விட ஆணவம் தான் அதிகமாக உள்ளது. ஸ்டோக்ஸ் மற்றும் மெக்குல்லம் இருவரும் எங்குமே செல்லாத ஒரு குழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் திட்டம் வேலை செய்யவில்லை என்றால், அதை மாற்றுவது தான் புத்திசாலித்தனம். ஆனால் இவர்கள் அதை செய்வதில்லை. இவர்களிடம் வெறும் வாய் பேச்சு மட்டும்தான் உள்ளது.

செயலில் எதுவும் இல்லை. பெரிய அணிகளுக்கு எதிராக இவர்களால் ஜெயிக்க முடியவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், உடனடியாக பயிற்சியாளர் மெக்குல்லத்தை நீக்கியே ஆகவேண்டும். ஸ்டோக்ஸ் சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவரை இழக்க வேண்டாம் என்று தான் நினைப்போம். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குனர் ராப் கீ, ஸ்டோக்ஸை நேரில் அழைத்து பேச வேண்டும். அவர் மூலம் “உன் ஆட்ட முறையை மாற்றிக்கொள், புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்’’ என்று ஸ்டோக்ஸிடம் சொல்ல வேண்டும். அப்படி அவர் கேட்கவில்லை என்றால், தயவு செய்து புதிய கேப்டனை தேடுங்கள். தனி நபரை விட அணியின் ஆரோக்கியம்தான் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: