மதுராந்தகம். டிச.23: மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், படாளம் கிராமத்தில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம், மரக்காணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், தாங்கள் பயிர் செய்யும் கரும்பினை இந்த ஆலைக்கு அனுப்பி அரவை செய்து சர்க்கரை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 3,500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு விவசாயம் செய்து, அதனை வெட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு 85 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்வதற்காக கரும்பு ஆலை நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஆலையின் கொதிகலன் இயந்திரத்தில் தீ மூட்டி சூடேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான கரும்பு அரவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஆலையின் வளாகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு கரும்பு அரவை இயந்திரத்தில் கரும்பினை போட்டு அரவையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், கலெக்டர் சினேகா, மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்திய சாய், சர்க்கரை ஆலை செயல் ஆட்சியர் குமரேஸ்வரி, சர்க்கரை ஆலை மேலாளர் மீனா சுந்தரி, அலுவலர் ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ரவி உள்ளிட்ட கரும்பு ஆலை தொழிலாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
