செங்கல்பட்டு – திருப்போரூர் இடையே மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

திருப்போரூர், டிச.16: செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் வரை, மழையால் சேதமடைந்த சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கடும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஓ.எம்.ஆர். சாலை, செங்கல்பட்டு செல்லும் சாலை, மாமல்லபுரம் செல்லும் சாலை, கூடுவாஞ்சேரி செல்லும் சாலை, கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலை ஆகிய சாலைகளில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக கொண்டங்கி ஏரி, தையூர் ஏரி, சிறுதாவூர் ஏரி, தண்டலம் ஏரி, மானாம்பதி ஏரி ஆகியவற்றில் இருந்து உபரி நீர் வெளியேறியதன் காரணமாக சாலைகளில் தார் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிக்கலை சந்தித்தனர். சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் விழுந்து சில இடங்களில் விபத்துகளும் ஏற்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை சார்பில், ஒவ்வொரு முக்கிய சாலைகளிலும் சேதமடைந்த பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்து சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் வரை உள்ள 27 கி.மீ தூர சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களில் தார் கொட்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது ஓ.எம்.ஆர். சாலையில் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் ஓ.எம்.ஆர். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தார், ஜல்லி கலவை கொட்டி, சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories: