மதுராந்தகம், டிச.20: லத்தூர் ஒன்றியம் செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை பாபு எம்எல்ஏ வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு விஜயன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாபு, மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன் கவுன்சிலர் மோகனா கோபிநாத் ஊராட்சி மன்ற தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் செய்யூர் எம்எல்ஏ மு.பாபு கலந்துகொண்டு 11ம் வகுப்பு படிக்கும் 87 மாணவர்களுக்கு 155 மாணவிகளுக்கு என அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் செய்யூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் புதிய கட்டிடத்தின் கல்வெட்டினை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மாதவன், விசிக நகர செயலாளர் எழில் ராவணன், ஒன்றிய நிர்வாகிகள் மணி, அர்ஜுனன், வெங்கடேசன், மகா கணபதி, தமிழ்மாறன், தம்பிதுரை, கோபிநாத், பாபா ஆசிரியர், சுரேஷ், கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
