நீலகிரி: படுகர் இன மக்களின் ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு ஜனவரி 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு சீமைகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
ஜெகதளாவில் கொண்டாடும் இந்த பண்டிகை சிறப்பு வாய்ந்தது. 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், தாய் வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு , அருள்வாக்கு கூறுவர். பின்னர் காரக்கொரையில் பூ குண்டம் இறங்குவர்.இந்த ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு தமிழக அரசு உள்ளூர் விடுமுறையும் அறிவித்து வருகிறது.
அந்தவகையில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் பண்டிகையை ஒட்டி ஜனவரி 7-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார்.
