சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெறுவது ஊழல் இல்லை எனில், எது ஊழல் என்று பாஜக விளக்க வேண்டும்? என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர நன்கொடையை ரத்து செய்த நிலையில் அறக்கட்டளைகள் மூலமாக பாரதிய ஜனதா கட்சி 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் ரூபாய் 3112 கோடி நிதி பெற்றிருப்பது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 2023-24 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த நன்கொடையில் 56 சதவிகிதத்தை பெற்றிருந்த பா.ஜ.க, 2024-25 ஆம் ஆண்டில் மொத்த நன்கொடையில் 85 சதவிகிதத்தை பெற்றிருக்கிறது.
மீதமுள்ள அரசியல் கட்சிகள் பெற்றிருப்பது 15 சதவிகிதம் மட்டுமே. 11 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய அரசில் ஆட்சி செய்வதன் மூலமாக அதிகாரத்தை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதற்கு கைமாறாக பா.ஜ.க. நன்கொடையை பெற்றிருக்கிறது. தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் நிதி பெறுகிற முறையினால் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து 2024 தேர்தலுக்கு முன்பாக இந்த நிதியை பா.ஜ.க. குவித்திருக்கிறது. ப்ரூடன்ட் எலக்ட்ரோல் டிரஸ்ட் மூலம் பெறப்பட்ட ரூபாய் 2181 கோடியில் ரூபாய் 757 கோடி லார்சன் டூப்ரோ நிறுவனமும், பிராக்ரசிவ் எலக்ட்ரோல் டிரஸ்ட் மூலமாக ரூபாய் 257 கோடியை டாடா குழுமத்தின் மூலமாகவும் பெறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, டாடா குழுமத்திற்கு நரேந்திர மோடி அரசு செமி கண்டக்டர் திட்டத்தில் நிறைய சலுகைகள் வழங்கியதற்காக பா.ஜ.க. இந்த நிதியை நன்கொடையாக பெற்றிருக்கிறது.
அதேபோல, ஆதித்ய பிர்லா குழுமம் ரூபாய் 606 கோடியையும், மகேந்திரா குழுமம் ரூபாய் 150 கோடியையும் ஒரே ஆண்டில் பா.ஜ.க.வுக்கு வழங்கியிருக்கிறது. ப்ருடண்ட் எலக்ட்ரல் டிரஸ்ட் 2018-2025 ஆம் ஆண்டுகளில் 32 மடங்கு நிதியை பா.ஜ.க.வுக்காக பெற்றுத் தந்திருக்கிறது. இந்த அறக்கட்டளைகள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெறுவது அப்பட்டமான ஊழல் இல்லை என்றால், எது ஊழல் என்று பா.ஜ.க. விளக்க வேண்டும். இத்தகைய சமநிலைத் தன்மையற்ற நன்கொடை குவிப்பு காரணமாகவே பா.ஜ.க. 2024 தேர்தலில் வெற்றி பெற்றது. இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் காரணமாக செயல்படுகிற பா.ஜ.க.வை மக்கள் மன்றத்தில் முறியடிக்க வேண்டிய கடமை காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது.
கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும், வறுமையை ஒழிக்கவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்குகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் வந்தது முதற்கொண்டு, அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்து வந்தார். கடந்த 11 ஆண்டுகளாக அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்து அதை முடக்குவதற்கு பல உத்திகள் கையாளப்பட்டன. இறுதியாக மகாத்மா காந்தி பெயரை நீக்கி விட்டு வாயில் நுழையாத பெயரை வைத்து புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கிறது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு குறிப்பாக, பட்டியலின மற்றும் பெண்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் வழங்கிய 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து, வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு பங்கேற்க உள்ளார். இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு இருக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயம் அமையப் போகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக இந்த ஆர்ப்பாட்டம் அமைய தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
