மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்

 

மாமல்லபுரம்,: மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்தனர். நேற்று உள்நாட்டு பயணிகள் ஏராளமானோர் சொகுசு பஸ், வேன், கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். தொடர்ந்து, பல்லவ மன்னர்கள் கை வண்ணத்தில் செதுக்கிய கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து அதன் முன்பு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தனர். பின்னர், ஏராளமான பயணிகள் கடற்கரையில் குவிந்ததால், எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர், கடற்கரையில் வட்டமிட்டு அமர்ந்தும், தாங்கள் கொண்டு வந்த உணவுகளை பரிமாறியும் மகிழ்ந்தனர்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி ஆட்டம் போட்டனர். அப்போது, அங்கு பணியில் இருந்த உயிர் காப்பாளர் கிருஷ்ணராஜ் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம், உடனடியாக கரை திரும்புமாறு அழைத்தும், யாரும் கண்டு கொள்ளாமல் கடலில் குளித்து மகிழ்ந்தனர். மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான பயணிகள் குவிந்ததால், கடற்கரை பகுதி களைகட்டி காணப்பட்டது. இதில் பயணிகள் கொண்டு வந்த வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தியதால் கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி, கோவளம் சாலை, கடற்கரை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் வெளியேற முடியாமல் வரிசை கட்டி நின்றது. பின்னர், விரைந்து வந்த டிராபிக் போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை வெளியேற்றி, நெரிசலை கட்டுப்படுத்தினர்.

Related Stories: