காவேரிப்பாக்கம் அருகே துணை முதல்வர் பிறந்தநாள் விழா 2 ஆயிரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

*அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அடுத்த பன்னியூர் கூட்ரோடு பகுதியில் நடந்த துணை முதல்வர் பிறந்தநாள் விழாவில், அமைச்சர் ஆர்.காந்தி 2 ஆயிரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில், மாநில இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி, 2 ஆயிரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பன்னியூர் கூட்ரோடு பகுதியில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர்.வினோத்காந்தி தலைமை தாங்கினார். எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஒன்றிய செயலாளர்கள் வேடந்தாங்கல் எம்.தெய்வசிகாமணி, ஓச்சேரி எம் பாலாஜி, ரவீந்திரன், செல்வம், சவுந்தர், பேரூராட்சி செயலாளர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பி.எல்.டி.சிவா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் எஸ்.பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 2 ஆயிரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அணி சார்பில் 9 குறுங்காடுகள் அமைக்கப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இவை தமிழகத்திற்கே முன்னோடியான அணியாக இருந்து வருகின்றன.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு துறையில் உலகம் போற்றும் வகையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் திராவிடத்திற்கு வாக்களித்தால் சுய மரியாதையுடன் வாழலாம். எனவே அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், ராணிப்பேட்டை மாவட்டம் வெற்றி மாவட்டமாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கும், மாணவர்களுக்கும் செயல்படுத்தும் திட்டங்கள் இந்தியாவிற்கே முன் உதாரணமாக இருந்து வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களுக்கு பிறகு பொது மக்களுக்கு மகத்தான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் மட்டும் இன்றி, சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார்.

குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம், பொது மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம், உங்களுடன் ஸ்டாலின் மருத்துவ முகாம், மற்றும் மாற்று திறனாளிகளுக்கு நகராட்சி பேரூராட்சி ஊராட்சியில் நியமன உறுப்பினர் பதவி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். ஆகையால் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் கூறியது போல் வெல்வோம் 200 என்பதில் அனைவரும் உறுதியாக நின்று உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: