*எம்எல்ஏ பேச்சு
சித்தூர் : சுத்தமான மாநரகமாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ பேசினார்.
சித்தூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் எம்எல்ஏ குரஜாலா ஜெகன்மோகன், நேற்று முன்தினம் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், சித்தூர் மாநகரத்தில் சேரும் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் அகற்றி அதனை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சித்தூர் மாநகரத்தை சுத்தமான மாநகரமாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆந்திர மாநில அரசு மாநிலத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மேற்கொள்ள ‘‘ஸ்வர்ண ஆந்திரா, ஸ்வச்சா ஆந்திரா’’ திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஆகவே மாநகரத்தில் பல்வேறு வகையான கழிவுகளை சேகரிப்பவர்கள் ஒழுங்கமைத்து, மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மேலும், ஒரு பகுதியாக சித்தூர் மாநகராட்சி அலுவலகத்தில், தூய்மை ஆந்திரா தூய்மை சித்தூர் என்ற தலைப்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.
சித்தூர் மாநகரத்தில் இரும்பு, காகித கழிவு, பிளாஸ்டிக் குப்பைகள், மின் கழிவுகள் போன்ற கழிவுகளை தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் சேகரிக்கும்போது, ‘‘தூய்மை ஆந்திரா, தூய்மை சித்தூர்’’ என்ற வாசங்களை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கழிவுகளை சேகரிக்க வேண்டும். தினசரி குப்பை கழிவு சேகரிப்பின் ஒரு பகுதியாக, மாநகராட்சி அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் துவாக்ரா சங்கங்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். சித்தூரை சுத்தமான சித்தூராக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு தேங்காய் எண்ணெய், சோப்பு, கை உறை, கால் உறை, முகக்கவசம், கைகள் கழுவும் சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் சித்தூர் மாநகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் மாநகராட்சி ஆணையர் நரசிம்ம பிரசாத், மேயர் அமுதா, சுடா சேர்மன் கட்டாரி ஹேமலதா, துணை மேயர் ராஜேஷ் குமார் ரெட்டி, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி லோகேஷ் உள்பட ஏராளமான அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
