உலகக் கோப்பை டி20: சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு; சுப்மன் வெளியே… இஷான் உள்ளே; தமிழகத்தின் சுந்தர், வருணுக்கு இடம்

புதுடெல்லி: உலகக் கோப்பை டி20 போட்டிகளில் ஆடும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை டி20 போட்டிகள், வரும் 2026ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி துவங்கி, மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளன. குரூப் ஸ்டேஜ் போட்டிகள், பிப். 7 முதல் 20 வரை நடைபெறும். பின்னர், பிப். 21 முதல் மார்ச் 1ம் தேதி வரை, சூப்பர் 8 சுற்று போட்டிகள் அரங்கேறும். அரை இறுதிப் போட்டிகள், மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டிகள், மார்ச் 8ல் நடைபெறும். இப்போட்டிகள், இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளன.

இந்நிலையில், உலகக் கோப்பை டி20 போட்டிகளில் ஆடும் இந்திய அணி பற்றிய அறிவிப்பை, இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் நேற்று வெளியிட்டார். அதன்படி, இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக அக்சர் படேலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமீப போட்டிகளில் ஃபார்மை இழந்து மோசமாக ஆடிவரும் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு, டி20 அணியில் இடமில்லை. அதேபோல், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் ஒதுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார். இஷான் கிஷண், 2வது விக்கெட் கீப்பராகவும், தேவைப்பட்டால் துவக்க வீரராகவும் களமிறங்கும் வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவிர, தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் உலகக் கோப்பை அணியில் இடம் தரப்பட்டுள்ளது.

* உலகக் கோப்பைக்காக ஆடும் இந்திய வீரர்கள்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, சிவம் தூபே, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங்.

Related Stories: