மவுன்ட் மவுன்கனுய், டிச.20: நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து, முதல்நாளில் 334 ரன் குவித்து ஒரு விக்கெட் மட்டும் இழந்திருந்தது. கேப்டன் லாதம் 137 ரன்னில் அவுட் ஆக, மறுபுறம் 178 ரன்களுடன் களத்தில் இருந்த கான்வே, நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கான்வே, டெஸ்ட் அரங்கில் 32 போட்டிகளில், தனது 2வது இரட்டை சதத்தை விளாசி சாதனை படைத்தார். தொடர்ந்து 367 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன், 227 ரன்கள் அடித்த கான்வே, ஜஸ்டின் கிரீவ்ஸ் பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து, வில்லியம்சன் 31, பிலிப்ஸ் 29 என நியூசிலாந்து வீரர்கள் வரிசையாக அவுட் ஆக, மறுபுறம் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். அணியின் ஸ்கோர் 8 விக்கெட் இழப்பிற்கு 575 ஆக இருந்தபோது, நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில், சீல்ஸ், பிலிப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறப்பாக தொடக்கம் கிடைத்தது. அந்த அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 110 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் ஜான் கேம்பல் 45 ரன்னிலும், பிராண்ட்ன் கிங் 55 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
