புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி பள்ளியில் ரோபோடிக் ஆய்வகம் திறப்பு

புதுக்கோட்டை, டிச.20: புதுக்கோட்டை மச்சுவாடியில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகம் (Robotic) துவங்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் செயல்முறை அடிப்படையிலான கற்றலின் மூலம் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கருத்துக்களை வலுப்படுத்தவும் பிரச்னைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும் குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனை கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் இந்த ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை, கோவை ,சேலம் மற்றும் புதுக்கோட்டை உட்பட 15 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி என்ற அடிப்படையில் 15 அரசு பள்ளிகளில் இயந்திரவியல் ( ரோபோடிக்) ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை பயன்படுத்தி ரோபோக்களை வடிவமைக்க சிறந்த முறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளன.

அதன்படி, இயந்திரவியல் ஆய்வகத்தை முதன் முதலாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திருச்சியில் நேரடியாக துவக்கி வைத்தார்.இதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இயந்திரவியல் ஆய்வகத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்தார்.இதில் மாவட்ட கல்வி அலுவலர். ஆரோக்கியராஜ், கூடுதல் திட்ட அலுவலர் செந்தில், பள்ளி துணை ஆய்வாளர். குருமாரிமுத்து மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: