ஆர்.எஸ்.மங்கலம், டிச.20: ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் மௌசுரியா கேசர்கான் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் அன்னம்மாள் ஸ்டெல்லா ராணி வரவேற்புரை நிகழ்த்தினார். இப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 124 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினா வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் மேம்படவும், மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருவதற்காகவும், தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வருகிறது.
பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பெண்கள் சமூகத்தில் சமநிலையை அடைய கட்டாயம் உயர் கல்வி படிக்க வேண்டும் எனவும் பேசினார். இவ்விழாவில் பள்ளித்துணை ஆய்வாளர் ராமமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அஹமதுல்லா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மைதிலி, வார்டு உறுப்பினர்கள் கருப்பாயி மருது, சரண்யா, காளிதாஸ் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்களும், கலந்துகொண்டு விழாவில் வாழ்த்தி பேசினர்.ஆசிரியர்கள் தாஸ், முருகேசன், இப்ராஹிம்சா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தனர். மேலும் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள், மாணவிகள், மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் முதுகலை ஆசிரியர் காஜாசெரீப் நன்றி கூறினார்.
