போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

கோவை, டிச.20: கோவை மாவட்டம் டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து துறை சார்பில் தலைகவசம் அணிவது குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வடக்கு, மத்திய மண்டலம் (பொறுப்பு) விஸ்வநாதன், பிரதீபா (மேற்கு), வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேர்முக உதவியாளர் தெற்கு (பொறுப்பு) பூங்கோதை, போக்குவரத்து அலுவலர்கள், போலீசார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பேரணியில் கலெக்டர் சாலை பாதுகாப்பு நம் உயிர் பாதுகாப்பு என்பது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டுநர்களுக்கு வழங்கியும், தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு ரோஜா பூக்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இப்பேரணியானது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி வஉசி மைதானம் வரை சென்று நிறைவு பெற்றது. இப்பேரணியில் தெற்கு, வடக்கு மத்தியம், மேற்கு வட்டார போக்குவரத்து சேர்ந்த ஆய்வாளர்கள், உயிர் அமைப்பினர், வாகன விற்பனையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், பயிற்றுநர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  அவர்கள் தலைக்கவசம் அணிந்து, சிக்னலை மதிப்போம் நடைபாதையில் நடப்போம், நலமுடனே பயணிப்போம், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: